இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். தற்போது அவர் நடித்துள்ள சிவலிங்கா படம் வெளிவர இருக்கிறது. இதில் அவர் லாரன்சுடன் நடித்துள்ளார். அடுத்து செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார். இறுதிச் சுற்று தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ளார். தமிழ் கற்று தமிழ் பெண்ணாக மாறி வருகிறாராம் இதுபற்றி அவர் கூறியதாவது:
என் வாழ்க்கை குத்துச்சண்டை மைதானத்திலேயே கழிந்துவிடும் என்றுதான் கருதிக் கொண்டிருந்தேன். கடவுள் சுதா கொங்கரா (இறுதிச்சுற்று இயக்குனர்) என்ற தேவதையை அனுப்பி என் வாழ்க்கையை மாற்றி விட்டார். நான் இப்போது என்னை தமிழ் பெண்ணாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். இதற்காக முடிந்த அளவிற்கு மற்றவர்களிடம் தமிழ் பேசி, தமிழை கற்று வருகிறேன். இப்போது என்னால் மற்றவர்கள் பேசும் தமிழை புரிந்து கொள்ள முடிகிறது. திக்கி திணறி நானும் தமிழ் பேசுகிறேன். விரைவில் தமிழ் மொழியை முழுமையாக பேச கற்றுக் கொள்வேன்.
தமிழ் கலாச்சரத்தின் மீது பெரிய ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பழைய தமிழ் படங்கள் நிறைய பார்க்கிறேன். கிராமத்து படங்களில் காட்டப்படும் பாவாடை தாவணி அணிந்த பெண்களை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். அவர்களைப்போல வாழ முடியாவிட்டாலும் சினிமாவிலாவது பாவாடை தாவணி அணிந்து நடிக்க விரும்புகிறேன். அந்த அளவிற்கு இந்த ஊரும், மக்களும் எனக்கு பிடித்தவர்களாக இருக்கிறார்கள். இறுதிச்சுற்று படம் என்னை தேசிய விருது வரைக்கும் கொண்டு சென்று விட்டதால் எனது கதை தேர்வில் கவனமாக இருக்கிறேன் என்கிறார் ரித்திகாசிங்.
No comments:
Post a Comment